Thursday, 15 July 2010

நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!

குழந்தைகள், அன்பான மனைவி
நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும்
எப்படி மறப்பதோ உன் நினைவை!

இதயம் சுட்டு சுட்டு
வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும்
எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும்
இக்காலம் -

எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா!
உண்மையாக காதலிக்கிறேன்
இரண்டு வீட்டின் நன்மைக்காய்
பிரிந்து இருக்கிறேன் -
பிரிந்திப்படி உயிர்தின்று வாழ
எப்படி சம்மதித்துக் கொண்டேனோ!

உலகமெலாம் சுற்றுகிறேன்
வருடங்கள் பலதை
வயதால் விழுங்கி விட்டேன்
நரை தட்டியும் போகலாம் – உன்
நினைவொழித்த பாடில்லையே!

நீ நடந்து வந்த சப்தம்
எனை அழைத்த ஜாடை
பேசிய விழிகள்
தொட்டுப் பார்த்த உணர்வு
எனக்காய் காத்திருந்த தவிப்பு
பிரிகையில் அழுத அழுகை....
எப்படி மறப்பேன் என் நெஞ்சே…????

வயதறியாத வேகம்
எதையோ தியாகம் செய்வது போன்ற எண்ணம்
வேறு வழி தெரியாத முடிவு
இப்பிரிவின் வலியை -
அன்றறிய சாத்தியமில்லாத தருணம்

இப்படித் தான் கொல்கிறதா உன்னையும்???
எனை உயிராய் சுவாசிக்கும் மனைவி
உனை பற்றி கேட்டு விமர்சிக்கும்
மகளுக்கு சொன்னளவு கூட
உன் மேல் வைத்திருந்த அன்பை -
உன்னிடம் சொல்ல முடியாமல் போனதே

வருட காலமாய் வலிக்கிறது போல்;
பாடல் கேட்க கொள்ளாத பொறுமை
ஒரு படம் பார்க்க ஒதுக்காத நேரம்
சிரித்துப் பேச கூட இல்லாத மனம்
அத்தனைக்கும் காரணம் -
நீயென்று சொல்லி
நான் யாருக்குப் புரிய வைத்து

வேறென்ன நிகழ்ந்துவிடும் இனி??
சோகமாய் அமர்ந்தால்
ஓரிரு வார்த்தையில் -
‘குடும்பம் குழந்தைகள் இருக்கு..,
தாங்கிக்கொள் அவ்வளவு தான்’ – என்று சொல்பவர்களுக்கு

நீயென்பதோ நானென்பதோ
புரியாத ஒற்றை வார்த்தை ‘காதல்’ மட்டுமே!
காதலித்தால் மறுக்கும் சமூகம்
நினைத்து அழுதால் கண்துடைக்க இயலாத மனிதர்கள்
பிரிக்க மட்டும் கொண்டு வரும் நியாயத்தில்

இனியாவது -
திருமணம், குடும்பம் போன்றவற்றை
நம்மை போன்றோரை பார்த்தாவது
அகற்றிக் கொள்ளட்டும்.

அன்றும் இன்றும் மனதை மட்டும் அப்படியே
வைத்துக் கொண்டு வெறும் மனிதர்களை கடந்து
நாட்களை கடந்து
வாழாத பொழுதுகளாய் வெற்றிடம் கொள்கிறதே
வாழ்க்கை.. யார் காரணமாவார்???

இதோ, போகட்டும் பிதற்றல். என
முடித்துக் கொள்கிறேன்,
அழும் மனதோடு உதட்டை விரித்து
சிரித்துக் கொள்கிறேன்,

இன்னும் நூறு வருடம் வாழ
என் சுற்றத்திற்காய் எல்லாவற்றையும்
தாங்கிக் கொள்கிறேன்,
யாரேனும் கேட்டால் நலம் என்றே
சொல்லிவிடுகிறேன்,
நீயும் அப்படியே சொல் நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!

No comments:

Post a Comment